திண்டிவனம் அருகேயுள்ள பெலாக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (62). இவர் தனது வீட்டிலேயே மளிகைக் கடை நடத்திவருகிறார்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி இரவு பாண்டுரங்கன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ஒன்பது பவுன் தங்க நகை மற்றும் ரூ. 2 ஆயிரம் ரொக்கத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து பாண்டுரங்கன் ரோசனை காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற டிஎஸ்பி கணேசன், காவலர்கள் தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழுமலை (49), சாத்தாம்பிள்ளை(58) ஆகிய இருவரையும் கொள்ளை சம்பந்தமாக கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் பாண்டுரங்கனின் வீட்டை உடைத்து கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து நாலரை பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்த காவலர்கள், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க : புதுச்சேரியில் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் மதிய உணவுத் திட்டம்!