ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பரப்புரைகளும், பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருன்றன.
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன், நாம் தமிழர் வேட்பாளர் பிரகலதா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ராஜா மற்றும் அரசன் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் செய்யப்படுவது நாளையுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விழுப்புரம் தனி தொகுதியில் போட்டியிடும் அன்பின் பொய்யாமொழி இன்று தனது வேட்புமனுவை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சுப்பிரமணியனிடம் தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்பின் பொய்யாமொழி பேசியதாவது:
கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்கு வரும் திருநங்கைகளுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வழிவகை செய்வேன். சாதி, மத மோதல்கள் நடைபெறாமல் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ நடவடிக்கை எடுப்பேன். தேர்தலில் வெற்றி பெற்றால், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.