விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவில் கலந்துகொள்வதற்காக நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் வந்துள்ளனர்.
விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் நேற்று (ஏப். 18) தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பின் சார்பில் மிஸ் கூவாகம் போட்டி நடந்தது. மிஸ் கூவாகம் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 7 பேருக்கும் பொது அறிவுத்திறன்,எய்ட்ஸ் விழிப்புணர்வு உள்ளிட்டவை குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
இதில் சிறந்த முறையில் பதில் அளித்த சென்னையை சேர்ந்த மெகந்தி மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார். திருச்சியை சேர்ந்த ரியானா சூரி 2ஆம் இடத்தையும், சேலத்தை சேர்ந்த சாக்ஷி சுவீட்டி 3ஆம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது. விழாவிற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று முன்தினம் (ஏப்.17) தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் நடத்திய மிஸ் கூவாகம் அழகிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த சாதனா மிஸ் திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டார். சென்னையைச் சேர்ந்த மதுமிதா 2ஆம் இடத்தையும், சென்னையைச் சேர்ந்த எல்சா 3ஆம் இடத்தையும் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை சாதனா 'மிஸ்' திருநங்கையாக தேர்வு