விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கவுதம் சிகாமணி வெற்றிப் பெற்றார். அவர் இன்று தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்தார்.
அப்போது அவர் கூறுகையில், "கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதை அறிந்து தற்போது முதற்கட்டமாக கள்ளக்குறிச்சியில் உள்ள 21 வார்டுகளுக்கும் டேங்கர் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
இது நான் தொகுதியில் மேற்கொள்ளும் முதல் வளர்ச்சி திட்டமாகும். இதை தொடர்ந்து தொகுதியின் அனைத்து பகுதியிலும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிமுகவால் குடிநீர் பிரச்னைக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை", என்று குற்றஞ்சாட்டினார்.