கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள நடூர் பகுதியில் கனமழை காரணமாக தனியாருக்குச் சொந்தமான சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து சுற்றுச் சுவர் இருந்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நேரத்தில் மேட்டுப்பாளையம் சம்பவத்தைக் கண்டித்தும், தொழிலதிபர் சிவசுப்பிரமணியன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியும் விழுப்புரம் மாவட்ட விசிக சார்பில் இன்று தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆற்றலரசு தலைமையில் திரண்ட 200க்கும் மேற்பட்ட விசிகவினர் சென்னை - குருவாயூர் விரைவு ரயிலை மறித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மரணம் விளைவித்தல் இல்லை! கொலைக்கு நிகரான மரணத்தை ஏற்படுத்துதல்!
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டச் செயலாளர் ஆற்றலரசு, "அரசு அலுவலர்களின் மெத்தனப்போக்கே சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியானதற்குக் காரணம். இதனைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தடியடி நடத்தியுள்ளனர்.
சுற்றுச் சுவர் இருந்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசு இதனை செய்யாதது வெட்கக்கேடான காரியம். தொடர்ந்து மாநில அரசு பட்டியலின மக்களுக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலவளவு குற்றவாளிகளை அரசு தப்பிக்கவிட்டுள்ளது.
இதனைக் கண்டித்தும், மேட்டுப்பாளையத்தில் இறந்துபோனவர்களின் குடும்பத்துக்கு நீதி வழங்கக் கோரியும், விழுப்புரத்தில் விசிக சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது" என்றார்.