திண்டிவனம், மயிலம் காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பல்வேறு கிராம பகுதிகளில் தொடர்ந்து வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு மற்றும் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருக்கும் பெண்களை தாக்கி நகைப்பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.
அதனடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் நேற்று சந்தேகத்தின் பேரில் சோழபாண்டிபுரம் கிராமத்தை சேர்ந்த வேடியப்பன், பாண்டியன் மற்றும் விக்கிரவாண்டி சித்தேரி பகுதியை சேர்ந்த அருணாச்சலம் ஆகிய மூவரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், திண்டிவனம் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 35 சவரன் தங்கம் மற்றும் 350 கிராம் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.