விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள காரை என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சக்திவேல் கடந்த 12ஆம் தேதி, செ.புதூர் அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், தவறான புரிதலால் அப்பகுதி மக்கள் அவரை தாக்கியதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் எனக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சக்திவேலின் உடலை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
உடல்கூறாய்வுக்குப்பின் சக்திவேலின் உடல் அவரது உறவினர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது சொந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சாதி வெறியர்கள், தொடர்ந்து தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், அந்த வன்கொடுமைகளை நியாயப்படுத்தும் வகையில் அவர்களை பெண்களுடன் முடிச்சுப்போட்டு பேசுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதேபோல் சக்திவேல் மீது அபாண்டமாக பழி சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது. இந்த வழக்கை உடனடியாக விசாரித்து சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
அதுமட்டுமின்றி உயிரிழந்த சக்திவேலின் குடும்பத்துக்கு சட்டப்பூர்வமாக வழங்கவேண்டிய நிவாரணத் தொகையும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இளைஞரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்!