விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தனது கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக கள்ளக்குறிச்சி வந்திருந்தார். அதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மீது அடிக்கடி ஊழல் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளன.
ஏற்கனவே, எழுந்த பல குற்றச்சாட்டுகளின் மீது விசாரணை நடந்துவருகின்றன. தற்போது மீண்டும் அதேபோன்று குற்றச்சாட்டு எழுந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து முழுமையாக விசாரித்து குற்றவாளிகளைக் கண்டறிந்து, இதுபோன்ற முறைகேடுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க ஆணயம் ஒன்றை அமைக்க வேண்டும்.
தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பை மக்கள் மீது திணிக்கக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக சார்பில் திருச்சியில் பிப்ரவரி 22ஆம் தேதி தேசம் காப்போம் மாநாடு மற்றும் பேரணி நடைபெறவுள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டம் ஒட்டுமொத்த தேசத்திற்கு எதிரானது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
எனவே அனைத்து ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அந்தச் சட்டத்தை மோடி அரசு திரும்பப்பெறும் வரையில், அதனை எதிர்க்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 40 கிமீ தூர மனித சங்கிலி!