கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் மணல் கொள்ளை நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் வந்தது.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷின் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து தீவர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில் இன்று காலை சுமார் 7 மணியளவில் திருக்கோவிலூர் அருகே உள்ள மண்டபம் பகுதியில் இரண்டு லாரிகளில், ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் திருடுவதாகவும், அதேபோல கரடி பகுதியில் மூன்று மாட்டு வண்டிகளில் மணல் திருடுவதாகவும் திருக்கோவிலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குணபாலனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உதவி ஆய்வாளர், அவரது தலைமையிலான காவல் துறையினர், மண்டபம் பகுதியில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த லாரிகளை சுற்றிவளைத்தனர். ஆனால், காவல் துறையினர் வருகையை அறிந்து திருட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பின்பு, அவர்கள் மணல் அள்ள பயன்படுத்திய இரண்டு லாரிகள், மணல் அள்ள பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், கரடி பகுதியில் மூன்று மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்த சுப்பிரமணி(40), தெய்வீகன் (54), கல்வராயன்(55) ஆகியோரை திருக்கோவிலூர் காவல் துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பி ஓடியவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்..!