விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே கிழக்கொண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர் தனது மனைவி தனலட்சுமி, மூன்று பிள்ளைகள் ஆகியோருடன் காலனி பகுதியில் வசித்து வருகிறார். தனலட்சுமி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தாம் இறந்து விடுவோம் என்று எண்ணி, தமது இரண்டு பெண் குழந்தைகளான அர்ச்சனா (7) மற்றும் ஈசா(4) ஆகியோரை கிணற்றில் வீசி கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சி செய்துள்ளார். கிணற்றில் போதிய அளவு நீர் இல்லாத காரணத்தால் குழந்தைகள் மட்டும் இறந்து விட தனலெட்சுமி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
கிணற்றில் அழுகுரல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இரண்டு குழந்தைகளும் இறந்த நிலையில் தண்ணீர் மிதந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஒன்று கூடிய ஊர் மக்கள் குழந்தைகளையும், தாயையும் கிணற்றில் இருந்து மீட்டனர். தகவல் அறிந்து வந்த அரகண்டநல்லூர் காவல்துறையினர் குழந்தைகளின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசிவிட்டு தாயும் தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.