கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரிலுள்ள என்.ஜி.ஜி.ஒ நகர் பகுதியில் வசித்து வருபவர் முத்துவின் மகன் வட்டி முரளி என்கிற முரளிகிருஷ்ணன். இவர், கடந்த பத்து ஆண்டுகளாக திருக்கோவிலூர் மார்க்கெட் வீதியில் ராகவேந்திர ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இதனால் இவரை நம்பி திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் 1000,1300, 1500 ரூபாய் வீதம் என 12 மாதங்கள் தவணை முறையில் சிட் பண்ட் சீட்டு கட்டி வந்துள்ளனர்.

இந்நிலையில், சுமார் ஒன்பதாயிரத்து 500க்கு மேல் கட்டி வந்த சீட்டு மூலம் கிடைத்த 8 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டிக் கொண்டு முரளிகிருஷ்ணன் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. கடந்த நவம்பர் 26ஆம் தேதி இரவிலிருந்தே முரளியின் நகைக்கடை மற்றும் வீடு ஆகியவை பூட்டிக் கிடந்தது. இதில் சந்தேகமடைந்த சீட்டு கட்டிய ஏஜெண்ட்கள் மற்றும் பொதுமக்கள் அவரது தொலைபேசி எண்ணிற்கு அழைத்தும் பயனில்லாமல் போனது. இதனையடுத்து முரளியின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தபோது அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவல் மர்மமாகவே இருந்து வந்தது.
பணத்தை கட்டி ஏமாந்து போன மக்களும், ஏஜெண்ட்களும் ஒன்று சேர்ந்து நவ. 30ஆம் தேதி மாலை திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் சீட்டு கட்டிய ஏஜெண்ட்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர் அவர்களிடம் காவல் அலுவலர்கள் விசாரிக்கையில், பணம் அதிகமுள்ளதால் கள்ளக்குறிச்சி சென்று பொருளாதார குற்றப்பிரிவு காவலர் அலுவலகத்தில் புகார் கொடுக்குமாறு தெரிவித்தனர்.
ஆனால் அங்கிருந்து போக மறுத்த பொதுமக்கள் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பணத்தை இழந்த மக்கள் அனைவரும் செய்தியாளர்களிடம் நடந்தவற்றை அனைத்தையும் கண்ணீர் மல்க தெரிவித்தனர். இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், திருக்கோவிலூர் காவல் துறையினர் இரவு 10 மணியளவில் பணத்தை இழந்தவர்களின் புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
கோடிக்கணக்கில் பணத்தை எடுத்துக்கொண்டு சென்ற முரளி திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஒ நகர் நகரில் 6ஆவது வார்டு திமுக உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பெயரில் திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் ஒரு ஆய்வாளர் மற்றும் இரண்டு உதவி ஆய்வாளர்கள் அடங்கிய காவல் துறையினர் தேடிவந்தனர்.
இந்நிலையில் இன்று(20-12-2019) காலை 10 மணியளவில் திருக்கோவிலூர் ஆசனூர் சாலையில் தனிப்படை காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முரளி அவரது மனைவி மற்றும் அவரது மாமனார் குமாரசாமிராஜா ஆகியோர் திருக்கோவிலூரில் உள்ள அவரது சின்னமாமனார் வீட்டிற்கு TN32AC5050 என்ற சொகுசு காரில் சென்றுள்ளனர். அப்போது, அவர்களை தனிப்படை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பாண்டிச்சேரியில் உள்ள அவரது மாமனார் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 50 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1.185 கிலோகிராம் தங்கம், 16.500 கிலோகிராம் வெள்ளி ஆகியவற்றை தனிப்படை காவல் துறையினர் மீட்டனர். மேலும், மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய 10 லட்சம் மதிப்பிலான சொகுசு காரை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் கள்ளக்குறிச்சி விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: படைப்பாளிகளின் உழைப்பிற்குச் சான்றாகத் திகழும் ராமோஜி ஃபிலிம்சிட்டி - குடியரசுத் தலைவர் புகழாரம்!