விழுப்புரத்தில் தடையை மீறி பாஜகவின் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா பேசுகையில், "இந்துக்களை இழிவுப்படுத்துவதையே கொள்கையாக கொண்டவர் கருணாநிதி. பிகாரி பிரசாந் கிஷோருக்கு 350 கோடி ரூபாய் கொடுத்தவர்கள் திமுக முட்டாள்கள்.
திமுகவிற்கு தவசம் செய்யவே பிரசாந் கிஷோருக்கு 350 கோடி கொடுத்துள்ளனர். கிறிஸ்தவர்களின் மிரட்டலுக்குப் பயந்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. திருமாவளவனை மு.க. ஸ்டாலின் தூண்டி விடுகிறார். தேச விரோதி திருமாவை அடித்து விரட்டும்வரை வேல்யாத்திரை தமிழ்நாட்டில் தொடரும்.
நான் தேர்தல் பணி செய்திருந்தால் திருமாவளவன் மக்களவை உறுப்பினராகியிருக்க முடியாது. கருப்பர் கூட்டத்துக்குப் பின்னால் இருப்பவர்கள் திமுகவினர். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்துவருகின்றனர். திமுகவுக்கு 2021ஆம் ஆண்டு தேர்தல் தான் இறுதியானது" என்றார்.
பின்னர் காவல் துறையினரின் அனுமதியின்றி நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஹெச். ராஜா, விழுப்புரம் மாவட்ட முன்னாள் பாஜக தலைவர் வி.ஏ.டி. கலியவரதன் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம்: 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி