விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிவருபவர் சண்முகம். இவரிடம் கடந்த 16ஆம் தேதியன்று புகார் மனு ஒன்றை மணிகண்டன் என்பவர் கொடுத்துள்ளார். அதில், வைக்கோல் ஏற்ற வந்தபோது அங்கிருந்த இடைத்தரகர் இவரிடம் இருந்த பணத்தை பெற்றுக்கொண்டும், லாரியை மறைத்து வைத்துக்கொண்டும் மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் சண்முகம், மணிகண்டனை ஏமாற்றியவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டார். அப்போது புகார் அளித்த மணிகண்டன் தனது செல்போனை அணைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. எனவே அவரை தொடர்புகொள்ள இயலாமல் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு நேற்று தனது நண்பருடன் காவல் நிலையத்திற்கு வந்த மணிகண்டன் மீண்டும் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அப்போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் விசாரணை நடந்தபோது ஏன் வரவில்லை எனக்கேட்டு, அவரை கன்னத்தில் அறைந்து தகாத வார்த்தைகளைக் கூறி திட்டியுள்ளார்.
இதனை அவருடன் வந்த நண்பர் நடந்தவற்றை தனது கைப்பேசி கேமராவில் ரகசியமாக பதிவு செய்து வாட்ஸ்அப்பில் வெளியிட்டார். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இந்நிலையில், அறை வாங்கிய மணிகண்டன் தனது முகநூலில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னைத் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் தன்னிடம் மன்னிப்பு கோரியதாகவும், தான் அவரை மன்னித்துவிட்டதால் அந்தச் சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.