விழுப்புரம்: தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளை ஆய்வு செய்யும் 'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து 1.2.2023 மற்றும் 2.2.2023 ஆகிய தேதிகளில் வேலூர் மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 15.2.2023 மற்றும் 16.2.2023 ஆகிய தேதிகளில் சேலம் மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக 5.3.2023 மற்றும் 6.3.2023 ஆகிய தேதிகளில் மதுரை மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று (26.4.2023) விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக விழுப்புரத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் சங்கம், திண்டிவனம் வெண்மணியாத்தூர் சிட்கோ தொழில்முனைவோர் சங்கம், கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, ஈஜடி பாரி கரும்பு விவசாயிகள் சங்கம், சிறு, குறு முதலீட்டாளர்கள், மீனவப் பிரதிநிதிகள், கள்ளக்குறிச்சி மற்றும் சின்ன சேலம் அரிசி ஆலை அதிபர்கள் சங்கங்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள் சங்கம், பல்வேறு விவசாய சங்கப் பிரதிநிதிகள் போன்ற சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
விழுப்புரத்தில் ஐடி பார்க்: விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் விழுப்புரம் நகரத்தில் ஐடி பார்க்(IT Park) அமைக்க வேண்டும் என்றும், கனரக தொழில் நிறுவனங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் அமைத்திட வேண்டும் என்றும், பாசன விளைநிலம் இல்லாத பகுதிகளை கண்டறிந்து சிட்கோ மூலம் தொழில்பேட்டை அமைத்திட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வைத்தனர்.
2 ஆயிரம் கோடியில் காலணி தொழிற்சாலை: கள்ளக்குறிச்சி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள் சங்கத்தின் சார்பில் உளுந்தூர்பேட்டையில் ரூபாய் 2,302 கோடியில் காலணி தொழிற்சாலை அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு மாவட்ட வளர்ச்சிக்கு வித்திட்ட முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தெருவிளக்குகளை சீர் செய்திடவும், உற்பத்தி தொடங்கிய தொழில் நிறுவனங்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கிடவும் ஆவன செய்திட வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
தொழில்முனைவோர் மற்றும் விவசாய சங்கத்தின் கோரிக்கை: திண்டிவனம் வெண்மணியாத்தூர் சிட்கோ தொழில்முனைவோர் சங்கத்தின் சார்பில் திண்டிவனத்தில் 51 மருத்துவமனை அமைத்திட வேண்டும். திண்டிவனம் சிட்கோ- விற்கு தனி துணை மின்நிலையம் அமைத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். விவசாய சங்கங்களின் சார்பில் அனைத்து கால்வாய்களையும் தூர்வாருவதற்கு ஆவன செய்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், கடல்நீர் ஊடுருவலை தடுக்க கொள்ளிடம் ஆற்று முகத்துவாரங்களில் தரைமட்ட தடுப்பணை அமைக்க வேண்டும். முந்திரி, வாழை, பலா போன்ற வேளாண் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி வருவாய் ஈட்ட தொழில் சார்ந்த திட்டங்களை உருவாக்க வேண்டும். கரும்பு விவசாயத்திற்கான சொட்டு நீர் பாசனத்திற்கு வழங்கப்படும் மானியத்தை ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை என்பதை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று வழங்க வேண்டும். நியாய விலைக்கடைகளில் பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் அனைத்து சிறு தானியங்களை விற்பனை செய்திட வேண்டும்.
நெல், மணிலா, பயறு வகை நுண்ணுட்டங்களுக்கு வழங்கப்படும் மானியம் போன்று தென்னை நுண்ணுட்டங்களுக்கும் மானியம் வழங்கிட வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு தென்னங்காய்களை உலர்த்திட உலர்களங்களை பெரிய அளவில் அமைத்திட ஆவன செய்திட வேண்டும். உளுந்து சார்ந்த தொழிற்சாலைகளை உளுந்தூர்பேட்டையில் அமைத்திட வேண்டும். பெரியசெவலையிலிருந்து சிவப்பட்டினம் வரை 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்லும் கெடிலம் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்.
மக்காச்சோளம் மற்றும் மரவள்ளி சார்ந்த தொழிற்சாலை சின்னசேலம் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதிகளில் அமைத்திட வேண்டும். விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், உப்புவேலூர் கிராமத்தில் நிரந்தரமாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்க வேண்டும். செஞ்சியில் வேளாண் உற்பத்தி கருவிகள் நிலையம் அமைக்க வேண்டும். சிறுதானிய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தனியாக கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
கம்பு, கேழ்வரகு, தினை போன்ற சிறுதானியங்களின் மதிப்புக்கூட்டி சத்து மாவுகள் தயாரிக்கும் அலகுகள் நிறுவிட வேண்டும். செற்கை உர பயன்பாட்டை தடுக்க பசுந்தாள் விதை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்கிட விழுப்புரம் மாவட்டத்தை விதை உற்பத்தி மண்டலமாக அறிவிக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும். திண்டிவனத்திலும் செஞ்சியிலும் நெல் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் முதலமைச்சர் அவர்களிடம் வைக்கப்பட்டது.
வணிகர் சங்கங்களின் கோரிக்கை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 40 வேளாண் விளைபொருட்களுக்கு சந்தைக் கட்டண வசூலை ரத்து செய்ததற்காக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரசிற்பம் செதுக்கும் கலைஞர்களுக்கு அரசு மானியத்துடன் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட பொதுவசதி மையம் அமைத்திட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அரிசி ஆலை அதிபர்கள் சங்கத்தின் சார்பில் அரிசி ஆலைகளுக்கு உச்ச நேர மின் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மீனவர் சங்கம் கோரிக்கை: மீனவ சங்கப் பிரதிநிதிகள் சார்பில் மீன்பிடி தடைகாலத்தில் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையினை உயர்த்தி வழங்கிட வேண்டும். மீன்பிடி விசைப்படகு மற்றும் இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகளுக்கு அரசினால் வழங்கப்படும் விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட மானிய எரியெண்ணெயின் அளவினை உயர்த்தி வழங்கிட வேண்டும்.
கடலூர் மாவட்ட மீனவர்கள் பயன்பெறும் வகையில் நல்லவாடு, சாமியார்பேட்டை, சின்னூர் வடக்கு மற்றும் தாண்டவராயன்சோழகன்பேட்டை கிராமங்களில் புதிய வலை பின்னும் கூடம் மற்றும் மீன் ஏலக்கூடம் கட்டித்தர வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. பல்வேறு சங்கங்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், அவற்றை பரிசீலித்து உரியவற்றை நிறைவேற்றி தருவதாக அவர்களிடம் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலின் போது, தலைமைச் செயலாளர் இறையன்பு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி, கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்ரமணியம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ்ரவன் குமார் ஜடாவத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.