விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு, மொண்ணையன் பேட்டை, கழுப்பெரும்பாக்கம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் மணிலா பயிர்சாகுபடி செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் மணிலா பயிரைச் சாகுபடி செய்வதற்காக 500 ஏக்கர் பரப்பளவில் அக்கிராம மக்கள் மணிலா பயிரை விதைத்தனர்.
ஆனால் கடந்த வாரத்தில் பெய்த கனமழை காரணமாக விதைக்கப்பட்ட மணிலா பயிரில் மழைநீர் தேங்கி நின்றதால் மணிலா பயிர் விதைகள் முழுவதும் அழுகி சேதமடைந்தது. இந்த வருடத்தில் மட்டுமே பயிரிடப்பட்ட மூன்று முறையும் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
ஒரு ஏக்கர் மணிலா பயிர் விதைப்பதற்கு மட்டும் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவாகிறது. இதுமுறை மூன்று முறைகள் பயிர்களை விதைத்ததில் 1.5 லட்சம் வரை செலவாகியுள்ளது. இவை அனைத்துமே வீணாகியதால் அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் நெல் மற்றும் வாழை ஆகியவற்றிற்கு மட்டும் அரசு சார்பில் பயிர் காப்பீட்டுத் திட்டம் அறிவித்திருக்கும் நிலையில் மணிலா பயிர்களுக்கு அறிவிக்கவில்லை எனவும் விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர். இழப்பீடு வழங்கினால் மட்டுமே மீண்டும் பயிர் செய்ய முடியும் எனவும் கூறியுள்ளனர்.