விழுப்புரம்: தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் அவருடைய மகனும் சேர்ந்து கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.கொளதம சிகாமணி மற்றும் இவர்களுடைய உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட 8 பேர் மீது விழுப்புரம் காவல் நிலையத்தில் 2012ஆம் ஆண்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்தனர். விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில், இதுவரை 11 பேர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
இந்த வழக்கின் முக்கியமான சாட்சிகளாக கருதப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் முன்னாள் அரசு ஊழியர்கள், அரசு தரப்புக்கு பாதகமாக சாட்சியம் அளித்துள்ளதுள்ளதால், உரிய நீதி கிடைக்காது அனைவரும் நீதிக்கு முன் சமம் என அதிமுக முன்னாள் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதோடு அவரின் சார்பாக முன்னாள் அரசு வழக்கறிஞர் சீனிவாசன் மூலமாக கடந்த மாதம் செப்டம்பர் 8ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
மேற்கூறிய மனுவில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக அரசு பணியில் இருக்கும் அதிகாரிகள் எப்படி சாட்சியம் அளிக்க முடியும்? எனவே அரசு தரப்புக்கு உதவியாக எங்களை இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என மனுவாக தெரிவித்திருந்தார். இந்த மனு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் ஆஜராக வேண்டும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டிருந்தார்.
நீதிபதியின் உத்தரவிற்கிணங்க கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பலத்த காவல் துறை பாதுகாப்புடன், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகி, வழக்கு தொடர்பான தங்கள் தரப்பு விளக்கம் அளித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையானது ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஜெயக்குமார் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மீண்டும் நடைபெற்றது.
மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய குற்றச்சாட்டின் மீது முகாந்திரம் இருப்பதால் இந்த மனுவை ஏற்றுக் கொள்வதாகவும், இந்த மனு மீது ஆட்சேபனை ஏதேனும் இருந்தால் அதனை தெரிவிக்குமாறு எதிர்தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி கால அவகாசம் வழங்கியிருந்தார். இது தொடர்பான வழக்கின் விசாரணையை வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளதால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மகனுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை ஒத்திவைப்பு.. தமிழக பாஜக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!