விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அன்னியூரை சேர்ந்த விஜயகுமார் மற்றும் பிரதீபா தம்பதி், கடந்த மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தங்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து விழுப்புரத்திற்கு சுற்றுலா வந்து, சிறிது நேரம் பொழுதை கழித்து விட்டு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேற்கத்திய கலாச்சார உணவுகளை விற்பனை செய்யும் ஒரு ஹோட்டலில், பாஸ்தா சாப்பிட்டு விட்டு சொந்த ஊரான அன்னீயூருக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், இரவு 11:30 மணியளவில் பிரதீபாவுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை உடனடியாக அருகே உள்ள அன்னியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், பிரதீபாவிற்கு புட் பாய்சன் ஆகிவிட்டதாகவும், ஆகையால் உடனடியாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து, ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டு பிரதீபாவை பரிசோதித்த முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தி காட்டுத்தீ போல விழுப்புரம் நகர் முழுவதும் பரவியது. இத்தகவலை அடுத்து உணவு பாதுகாப்புத் துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், சம்பந்தப்பட்ட ஹோட்டலில் சோதனை மேற்கொண்டு, தரமற்ற உணவுப்பொருள்களை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பிரதீபாவுக்கு, இருதயம் சம்பந்தப்பட்ட நோய் இருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிரதீபா பாஸ்தா சாப்பிட்டதால் தான் உயிரிழந்தாரா என்பது அவருடைய பிரேத பரிசோதனை முடிவில் தெரியவரும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேலூரில் சிக்கன் ஷவர்மா கடைகளில் அதிரடி சோதனை; 9 கடைகளுக்கு நோட்டீஸ்!