நாடு முழுவதும் அதிகரித்துவரும் கரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அதிகம் கூடும் கோயில்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட அனைத்து விதமான பொதுபோக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தின் மையப் பகுதியான விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட கார், வேன் ஓட்டுநர்கள் வேலையிழந்து தவித்துவருகின்றனர்.
இதுகுறித்து கார் ஓட்டுநர் விஜயபாபு கூறும்போது.,
"கரோனா ஊரடங்கால் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு சித்திரை மாதம் தான் வருமானம் தரக்கூடிய நாள்கள். கூவாகம் திருவிழா உள்ளிட்ட பண்டிகைகள் இந்த மாதத்தில் தான் வரும். மேலும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் வருமானம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசோ அல்லது தன்னார்வலர்களோ தங்களுக்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும். இங்குள்ள கார் உரிமையாளர்கள் அனைவரும் வங்கிகளில் கடன் வாங்கித்தான் வாகனம் வாங்கியுள்ளோம். தற்போது ஊரடங்கால் வண்டிகள் ஓடாத நிலையில் கடனை திருப்பித்தர சொல்லி தொல்லை தருகிறார்கள். எனவே கடன் நிலுவை தொகையை கட்டுவதற்கும், வண்டியை புதுப்பிப்பதற்கும் தங்களுக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்" என்றார்.
கார் உரிமையாளரும், ஓட்டுநருமான ஷங்கர் கூறும்போது.,
"ஊரடங்கு உத்தரவால் விழுப்புரம் ரயில் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட வண்டிகள் ஒரு மாதத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்காக வருடத்துக்கு ரூபாய் ஐந்தாயிரம் ரயில்வே நிர்வாகத்துக்கு கட்டணம் செலுத்தி வருகிறோம். அதேபோல் ஆண்டுக்கு 20 ஆயிரம் வைப்புத்தொகை கட்டி வருகிறோம். தற்போது உள்ள நிலையில் இரண்டு மாத வைப்புத்தொகை வீணாகிவிட்டது. மேலும் ஒரு மாதத்துக்கும் மேலாக வண்டி நிற்பதால் பேட்டரி, டயர், ஆயில் ஆகியவை வீணாகிவிட்டன. எனவே பழுது ஏற்பட்டுள்ள வண்டியை மீண்டும் இயக்க குறைந்தது ரூபாய் 10 ஆயிரம் செலவாகும். ரயில்கள் இயக்கப்படாததால் விழுப்புரம் ரயில் நிலையத்தில் உள்ள கார் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கஷ்ட ஜீவனத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, மத்திய - மாநில அரசுகள் எங்களுக்கு குறைந்தது ஐந்தாயிரம் நிவாரண தொகை வழங்க வேண்டும்.
வங்கிகளில் கடன் பெற்றுள்ளவர்கள் மூன்று மாத கடன் தொகையை கட்ட தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், பைனான்ஸ் நிறுவனங்கள் கடன் தொகையை கேட்டு தொல்லை தருகிறார்கள். எனவே எங்களுக்கு வண்டியை புதுப்பிக்கவும், வைப்புத் தொகை கட்டவும் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்" என்றார்.
இதையும் பார்க்க: அரசியல் சண்டை போடுவதற்கு இது நேரமல்ல: சூசகமாக பட்னாவிஸை விமர்சித்த சரத் பவார்!