கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஊரடங்கு தொடங்கியது முதலே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கி பணிபுரிந்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையிழந்து, வருமானம் இன்றி பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர்.
இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் கடந்த சில நாட்களாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து வந்த சிறப்பு ரயில் மூலம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 232 தொழிலாளர்கள் இன்று காலை, விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.
தொடர்ந்து, மருத்துவக் குழுவினர் உதவியுடன் இவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் காலை உணவு வழங்கப்பட்டு சிறப்புப் பேருந்துகள் மூலம், அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க : ஏற்காட்டில் பூந்தொட்டிகள் மூலம் கரோனா விழிப்புணர்வு வாசகம்