விழுப்புரம் அருகேயுள்ள வி.அகரம் ஊராட்சியில், இன்று, கூட்டுறவுத் துறை சார்பாக தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கக் கட்டடம், ஊரக வளர்ச்சித் துறை சார்பாக அங்கன்வாடி மைய கட்டடம், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக துணை சுகாதார நிலையம் ஆகியவற்றைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கட்டடங்களைத் திறந்து வைக்க, மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.ஆர்.முத்தமிழ்ச்செல்வன், எம்.சக்கரபாணி ஆகியோரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஏழை விவசாயிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் பயிர்க் கடன்கள் வழங்கினார்.
![விழுப்புரம், வி.அகரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் நடமாடிய மக்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-vpm-02-minister-function-scr-7205809_05062020174344_0506f_02440_695.jpg)
இதற்கிடையே இந்நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள், பயனாளிகள் என அனைவரும் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசங்கள் அணியாமலும் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். ஆனால், அமைச்சர், ஆட்சியர், அலுவலர்கள் என அனைவரும் இதனைப் பொருட்படுத்தாமல் நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பினர். இந்த சம்பவம், சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ”சாலைகளில் முகக்கவசங்கள் அணியாமல் சென்றால் வாகனங்களைப் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யும் காவல் துறையினர், இந்த சம்பவம் தொடர்பாக அமைதி காப்பது ஏன்?” என்றும் பல தரப்பு மக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பும் அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?