விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஜெயஸ்ரீயை அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலைசெய்தனர். தமிழ்நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, இன்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை. ரவிக்குமார் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சிறுமதுரை படுகொலை அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் இந்த வழக்கில் உறுதியாக இருக்க வேண்டும். பிறழ் சாட்சியாகப் பின்னாளில் மாறிவிடக் கூடாது.
குற்றவாளிகள் இருவரையும் பிணையில் விடுவிக்கக் கூடாது. இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் நடத்தி குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை அளிக்க வேண்டும். இந்தக் குற்றம் மனித குலத்திற்கு எதிரானது" என்றார்.
இதையும் படிங்க: அதிமுக பிரமுகர் வெறிச்செயல்: எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் கலங்கவைக்கும் வாக்குமூலம்!