விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு, அப்போதைய சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐபிஎஸ் அலுவலரிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்கறிஞர், குறுக்கு விசாரணையைத் தொடங்கி 6 நாட்கள் நடத்தியுள்ள நிலையில், இன்னும் குறுக்கு விசாரணை நிறைவடையவில்லை. இதையடுத்து இன்றும்(மார்ச்.3) வழக்கு விசாரணைக்கு வந்தது.
செங்கல்பட்டு எஸ்பி ஆஜராகவில்லை
அப்போது, முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு மற்றும் புகார்தாரரான பெண் ஐபிஎஸ் அலுவலர் ஆகிய இருவரும் ஆஜராகினர். செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் ஆஜராகவில்லை. அவர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து, அவரது வழக்கறிஞர் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
அதனைத் தொடர்ந்து, பெண் ஐபிஎஸ் அலுவலரிடம், முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு குறுக்கு விசாரணையைத் தொடங்கலாம் என்று நீதிபதி கோபிநாதன் கூறினார். அதன்படி, முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்கறிஞர் தினகரன் ஆஜராகி, பெண் ஐபிஎஸ் அலுவலரிடம் 7ஆவது நாளாக குறுக்கு விசாரணையை நடத்தினார்.
வழக்கு ஒத்திவைப்பு
இவ்வழக்குத் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி குறுக்கு விசாரணை செய்தார். அதற்கு பெண் ஐபிஎஸ் அலுவலர் உரிய பதில் அளித்தார். இதனை நீதிபதி கோபிநாதன் பதிவு செய்துகொண்டார். இந்த குறுக்கு விசாரணை காலை 10.45 மணிக்குத் தொடங்கி, மாலை 4 மணி வரை நடந்தது.
இருப்பினும் இந்த குறுக்கு விசாரணை நிறைவடையாததால், அதனை நிறைவு செய்வதற்காக, வழக்கு விசாரணையை வருகிற 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: வடசென்னை To ரிப்பன் பில்டிங்; சென்னையின் முதல் பட்டியலின பெண் மேயர் வேட்பாளர்!