விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சிறுகடம்பூர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த சின்னமுத்துவின் மகன் ஞானப்பிரகாசம் (68). கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று காலை உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உறவினர்கள் நேற்று மாலை ஞானப்பிரகாசத்தின் உடலை அடக்கம் செய்ய அங்குள்ள இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது, அந்த பகுதியில் புறவழிச்சாலை பணிகள் நடந்ததால் அவரது உடலை அங்கு அடக்கம் செய்ய மறுத்துவிட்டனர்.
இதையடுத்து அருகில் இருந்த புறம்போக்கு நிலத்தில் ஞானப் பிரகாசத்தின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் விவசாயம் செய்து வரும் நபர், உடலை அடக்கம் செய்வதற்கு இடம் தர மறுத்துவிட்டார்.
இதனால், அதிருப்தியடைந்த ஞானப்பிரகாசத்தின் உறவினர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய இடம் கேட்டு செஞ்சி - சிங்கவரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த செஞ்சி வட்டாட்சியர், ஞானப்பிரகாசத்தின் உடலை அடக்கம் செய்ய மாற்று இடம் தேர்வு செய்து கொடுத்தார். அதன்படி அந்த இடத்தில் ஞானப்பிரகாசத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது!