விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த வெளியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவர் செஞ்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் இன்று (மார்ச். 10) வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து செஞ்சியில் உள்ள தனது அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது செண்டூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த வல்லம் செயற்பொறியாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் அவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
ஆவணமில்லா ரொக்கம் பறிமுதல்
அப்போது அவர் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற 1,28,240 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்பு அந்த பணத்தை மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இயங்கிவரும் தற்காலிகத் தேர்தல் அலுவலகத்தில் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வாகனச் சோதனைகளில் வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருள்களை தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து பறிமுதல் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ1.72 லட்சம் கரூரில் பறிமுதல்