விழுப்புரம்: பெங்களூருவுக்கு மாதிரிகளை அனுப்பி, பரிசோதனை முடிவுகள் வருவதற்கு தாமதமாவது வாடிக்கையாகிவருகிறது. இதனால் ஒன்றிய அரசு மட்டும் செய்துவரும் வைரஸ் பகுப்பாய்வை, தமிழ்நாடு அரசு சார்பாக செய்யும் வகையில் ’வைரஸ் பகுப்பாய்வு மையம்’ அமைக்கவிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று (ஜூன் 25) தெரிவித்தார்.
வைரஸ் பகுப்பாய்வு மையம்
இந்த அறிவிப்பை வரவேற்பதாக விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (ஜூன் 26) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னையில் ஒன்றிய அரசின் அனுமதிபெற்று 2.5 கோடி ரூபாய் செலவில் ‘ஜெனோம் சீக்வென்சிங்’ ஆய்வகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ள அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு நன்றி. அமைச்சரிடம் நான் முன்வைத்த கோரிக்கை நிறைவேறியுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடனடி நடவடிக்கை
கரோனா மூன்றாவது அலை வர வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு, கடந்த 8ஆம் தேதி அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம், மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் 12 கோரிக்கைகளை வலியுறுத்தினார். அதில், தமிழ்நாட்டில் வைரஸ் பகுப்பாய்வு மையம் அமைப்பதற்கான கோரிக்கையும் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரு பக்கம் கல்வி, மறுபக்கம் சமூகப் பொறுப்பு - அரசுப்பள்ளி ஆசிரியையின் சமூக அக்கறை