விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி மகளிர் காவல்நிலைய தெருவில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்கவில்லை என அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலர்களிடம் புகார் அளித்துள்ளனர். இதனால் வேலைக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரி செல்பவர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று போக்குவரத்து காவல் நிலையம் முன்பு காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதேபோன்று கள்ளக்குறிச்சி அருகேயுள்ள மலைக்கோட்டாலம் கிராமத்தில் கடந்த ஒருமாதமாக குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி கிராமமக்கள் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் ஒருமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி பகுதியில் தொடரும் குடிநீர் பிரச்னைகள் தொடர்பாக பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்துள்ளதால், மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.