சென்னை: சென்னை பெசன்ட் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை அமைக்கும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "திராவிட முன்னேற்றக் கழகம் எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றும் விதமாக முதலமைச்சர் தொடர்ந்து உதவி செய்து கொண்டிருக்கிறார்.
முதலமைச்சர் விடியல் பயணம் திட்டத்தை அறிவிக்கும் போது மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா பேருந்து வசதியை செய்து கொடுத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆயிரம் ரூபாய் இருந்தது 1500 ரூபாயாக உயர்த்தி கொடுத்துள்ளார்.
சட்டமன்றத்தில் என்னுடைய முதல் பேச்சில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்து குரல் கொடுத்திருந்தேன். மாற்றுத்திறனாளிகள் மெரினா கடற்கரையில் அவர்களுடைய கால்களை நனைக்க வேண்டும் கடலை ரசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக சிறப்பு பாதையை உருவாக்கித் தந்தார்.
மெரினாவில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை அமைக்க மாற்றுத்திறனாளிகள் தரப்பில் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டிசம்பர் 3 இயக்கம் சார்பாக தீபக் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை அமைக்க முதலமைச்சராக கடந்த ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டினர். அதன்படி 1 கோடியே 61 லட்சம் மாற்றுத்திறனாளிகள் காண பிரத்யேக பாதை 159 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கூத்தாடி என்பதா?... “உச்சத்தை விட்டு வந்திருக்கிறேன்”... உதாரணம் சொன்ன விஜய்!
கிட்டத்தட்ட 40% பணிகள் நிறைவடைந்துவிட்டது. இந்த பணியை வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்து தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு முறைக்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "முதலமைச்சரின் உத்தரவின் பெயரில் நானும், மாநகராட்சி ஆணையரும் நடைபெற்று வரும் பணிகளை தற்போது ஆய்வு செய்தோம். மேலும் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினோம். பெசன்ட் நகர் தொடர்ந்து திருவான்மியூர் கடற்கரையில் இதே போன்று ஒரு சிறப்பு பாதையை அரசு அமைக்க உள்ளது.
சென்னை மட்டுமின்றி நாகப்பட்டினம், வேளாங்கண்ணி கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளது ஒரு மாதத்திற்குள் இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நான்கு ஐந்து மாதத்திற்குள் அந்த பணிகள் நிறைவேற்றப்படும்" என தெரிவித்தார்.
தொடர்ந்து விஜயின் உரை குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த உதயநிதி, “விஜய்க்கு இன்று காலையிலேயே வாழ்த்து தெரிவித்துவிட்டேன். ஆனால் அவர் மாநாட்டில் பேசியதை நான் இன்னும் கேட்கவில்லை. அவர் பேசியதைக் கேட்டு விட்டு பின்னர் பதில் அளிக்கிறேன்” என தெரிவித்தார்.