கரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளும்விதமாக மக்கள் ஊரடங்கு மார்ச் 22ஆம் தேதி நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து கரோனா தொற்று பாதிப்பு பரவலைத் தடுக்க களத்தில் தொய்வின்றி உழைத்துவரும் மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், ஊடகத் துறையினருக்கு நன்றி தெரிவித்து உற்சாகப்படுத்தும்விதமாக வேலூர் மாவட்ட தீயணைப்புத் துறை சார்பில் தீயணைப்பு வாகனங்கள் மூலம் சைரன் ஒலிக்கப்பட்டது.
அதேபோல் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள குடியிருப்புவாசிகள் அவரவர் வீடுகளின் மாடியிலும், வெளியிலும் நின்று கைகளைத் தட்டி, மணி அடித்து ஒலி எழுப்பி நன்றி தெரிவித்தனர்.
கரோனா எதிரொலியின் மூன்றாம் கட்ட நிலையை எதிர்கொள்ள இந்தியா தயாராகிவரும் பொருட்டு மார்ச் 22ஆம் தேதி காலை 7 மணிமுதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் மக்கள் ஊரடங்கை கடைப்பிடித்தனர்.
இதையடுத்து சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே கடைகள் ஏதும் திறக்கப்படாமல் மூடப்பட்டன. ஊரடங்கு உத்தரவை மக்கள் ஏற்று வீட்டிலேயே தங்கியதால் சாலை முழுவதும் வெறிசோடிக் காணப்பட்டன.
இதைத்தொடர்ந்து மாலைப்பொழுதில் சுகாதாரத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டுவருவதையும், கரோனா பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை அசராமல் மேற்கொண்டுவரும் மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பொதுமக்கள் கைகளைத் தட்டி ஓசை எழுப்பு தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று நடவடிக்கைக்கு எதிராகப் பணிபுரிந்துவரும் மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக இன்று பொதுமக்கள் தங்களது கைகளைத் தட்டி நன்றியைத் தெரிவித்தனர்.
இதுகுறித்து காமராஜர் பகுதியில் வசிக்கும் ஜீவிதா கூறும்போது,
"பிரதமர் மோடியின் உத்தரவின்படி இன்று ஒருநாள் நாங்கள் வீடுகளிலேயே இருந்து எங்களது ஆதரவை தெரிவித்தோம். மேலும் கரோனா தொற்றுக்கு எதிராகப் பணிபுரிந்துவரும் அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏற்கனவே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடையவும், மேலும் யாருக்கும் கரோனா தொற்று வராமல் இருக்கவும் நாங்கள் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறோம்" என்றார்.