விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஶ்ரீ. இவர் முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்களான கலியபெருமாள் மற்றும் முருகன் ஆகியோரால் அண்மையில் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். மேலும் சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கிவருகின்றனர். அந்தவகையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.50 ஆயிரம் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க முடியாத நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. காங்கிரஸ் இந்த முடிவை மிக வன்மையாக கண்டிக்கிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்ட பிறகுதான் நாட்டில் விவசாய பொருள்களின் உற்பத்தி அதிகரித்தது. மத்திய அரசு லாப நோக்கோடு சிந்தித்து இலவச மின்சாரத்தை நிறுத்தியுள்ளது. இதனால் உணவு தானிய உற்பத்தி குறையும். பிரதமர் மோடி செய்யும் தவறினை தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கக்கூடாது என்றார்.
இதற்கிடையே ஊரடங்கு தடையை மீறி, சிறுமதுரை கிராமத்திற்கு கூட்டமாக வந்ததாகவும், தொற்று நோய் பரப்பும் விதமாக செயல்பட்டதாகவும் கூறி கே.எஸ்.அழகிரி, மாவட்ட செயலாளர் ஆர்.டி.வி.சீனுவாசகுமார் உள்ளிட்ட ஐந்து பேர் மீது திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன் உள்ளிட்டோர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆறுதல் கூறவந்தவர்கள் மீது வழக்குப்பதிவு!