புதுச்சேரி ஆயுதப்படைக்குத் தேவையான துப்பாக்கித் தோட்டாக்களை வாங்குவதற்காக அம்மாநிலத்தைச் சேர்ந்த காவலர்கள் எட்டு பேர் வேனில் கடந்த 7ஆம் தேதி புதுச்சேரியிலிருந்து, மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்குச் சென்றிருந்தனர்.
துப்பாக்கித் தோட்டாக்களைப் பெற்றுக்கொண்ட இவர்கள், மீண்டும் புதுச்சேரி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்றிரவு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள சத்தியமங்கலம் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மீது மோதாமல் இருப்பதற்காக வேனை ஓட்டுநர் திருப்பியுள்ளார்.
இதில் எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த பாலத்தின் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநரான காவலர் குணசேகரன் பலத்த காயம் அடைந்தார். மற்ற காவலர்கள் லேசான காயம் அடைந்தனர்.
இதையடுத்து செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குணசேகரன் அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: பதறவைக்கும் சிசிடிவி காட்சி