விழுப்புரம்: டி.எடையார் கிராமத்தில் கஞ்சா போதையில் இருசக்கர வாகனத்தைத் திருடிவிட்டதாகவும், திருடிய வாகனத்தை திருப்பித் தருவதாகவும் கூறி அதே கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் கல்லூரி மாணவன் அருணை அழைத்துச்சென்று பனப்பாக்கம் ஏரியில் உள்ள கிணற்றில் கழுத்தை நெரித்துக்கொலை செய்து வீசி விட்டுச்சென்றனர். இதனையடுத்து தகவலறிந்து வந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் உடனடியாக கொலையில் தொடர்புடைய அதே கிராமத்தைச் சேர்ந்த 4 பேரைக் கைது செய்தனர்.
பின்னர் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவன் அருணின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அசம்பாவிதம் ஏற்படாதிருக்க பாதுகாப்புக்காக விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா தலைமையிலான போலீசார் டி.எடையார் கிராமத்திற்கு வந்தனர்.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவரது சொந்த ஊரான டி.எடையார் கிராமத்தில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவன் அருண் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தார். அமைச்சரை அருணின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்த எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும் அருணின் உறவினர்களுக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதில் ’நாங்கள் அழைக்காமல் நீங்கள் ஏன் வந்தீர்கள்?’ எனவும் கேள்வி எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அரை மணி நேரத்திற்குப் பிறகு திமுக தொண்டர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, மாணவனின் தந்தை முனுசாமியிடம் திமுக கட்சி சார்பில் நிதியாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார்.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சொந்த ஊரான டி.எடையார் கிராமத்திலேயே அஞ்சலி செலுத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 72 மாணவர்களை பிரம்பால் அடித்த இயற்பியல் ஆசிரியர் - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்!