விழுப்புரம்: தமிழ்நாட்டில் 85 ஆண்டுகளாக கள் இறக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பனை மரங்களை சார்ந்து வாழ்வாதாரம் ஈட்டும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , வேறு எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்குத் தடை இல்லாதபோது தமிழ்நாட்டில் ’கள்’ இறக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதை நீக்க வலியுறுத்தி பனைமரத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு
மேலும், பனை மரம் ஏறுபவர்கள் மீது மது விலக்கு (சாராய வழக்கு) போடக் கூடாது எனவும்; பூரி குடிசைப் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பனை மர ஏறிகளாக இருந்து வரும் நிலையில் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த தலைமுறையினர் இத்தொழிலை செய்ய முடியாத சூழல் உள்ளதால் ’கள்’ இறக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும்கூறி, கைகளில் பதாகைகளை ஏந்திப்போராடினர்.
காவல் துறையினர் தங்களது உடைமைகளை கைப்பற்றினால் அதனைத் திருப்பித் தருவதில்லை எனவும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
மேலும் அப்பகுதி மக்கள் , இந்தத் தொழிலை நம்பி தான் தங்களுடைய வாழ்வாதாரம் , தங்கள் பிள்ளைகளின் படிப்பு இருக்கிறது என கவலையுடன் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசு தங்களுக்கு கள் இறக்குவதற்கும் விற்பதற்கும் அனுமதி வழங்க வேண்டும் என அரசாங்கத்திற்கு பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து கூட்டாக அறப்போராட்டம் நடத்தினர்.