விழுப்புரம்: உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக திமுக எம்எல்ஏ லட்சுமணனின் பிறந்தநாள் விழாவிற்கு வைத்த பேனர்களை அகற்றக் கோரிக்கை வைப்பது தொடர்பாக, வளவனுரை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரகாஷ் என்பவர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட நிலையில் அவரை பாகிஸ்தான் குறித்து வீடியோ வெளியிட்டதாக போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தொகுதியின் திமுக எம்எல்ஏ லட்சுமணனின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 30 ஆம் தேதி அவரின் ஆதரவாளர்கள் வளவனூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் பல விதமான பேனர்களை வைத்தனர். இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி வைக்கப்பட்ட பேனர்களால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர் என்ற கிகாரணத்தை கூறி, அப்பேனர்களை அகற்றும்படி பிரகாஷ் காவல்துறையில் வைத்த கோரிக்கையின் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ லட்சுமணனுக்கே போன் செய்து, வளவனூர் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்ட பேனர்களை எடுக்கும்படி கூறியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், தலையில்லா உருவ பொம்மையை சாட்டையால் அடித்த காணொளி பதிவை வீடியோவாக வெளியிட்டார். இச்செய்தி கடந்த 3 ஆம் தேதி ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளில் வெளியானது.
முன்னதாக, இவர் கடந்த ஆக.14 ஆம் தேதி முகநூலில் வெளியிட்ட வீடியோவில், இன்றைய தினம் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நம் பங்காளி நாடான பாகிஸ்தானியர்கள் வாழ்க. பாகிஸ்தான் ஜிந்தாபாத். ஏனெனில், ஆதிதிராவிட சமூக மக்களுக்கு வட்டமேசை மாநாட்டில் 140 இடங்கள் வேண்டும் என்று கூறி அம்பேத்கரை அழைத்துச் சென்ற முகமது அலி ஜின்னாவின் நினைவை நான் போற்றுகிறேன். இன்று 140 ஆதிதிராவிடர்கள் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கிறீர்கள்.
அந்த இட ஒதுக்கீட்டை வாங்கிக் கொடுப்பதற்கு உறுதுணையாக இருந்தது முகமது அலி ஜின்னாதான். எனவே, பங்காளி நாடு வாழ வேண்டும் என நான் நினைக்கிறேன். 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என இந்தியாவிலிருந்து சொன்னால் எந்தச் சட்டப் பிரிவிலிருந்து கைது செய்யும் காவல்துறை... பங்காளி நாடு பாகிஸ்தான் வாழ்க என்பது ஒரு தேசியக் குற்றமா... முடிந்தால் வழக்கு போடட்டும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி" என்று பேசியுள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டதாக அவர் மீது, 153, 504, 505 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த வளவனூர் போலீசார் பிரகாஷை இன்று (அக்.6) கைது செய்தனர்.
இதையும் படிங்க: சாலையை ஆக்கிரமித்து திமுகவினர் வைத்த பேனர்; நொந்துபோய் பொம்மைக்கு சவுக்கடி கொடுத்த சமூக ஆர்வலர்