விழுப்புரம்: அதிமுக பொன்விழா ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உட்கட்சி பிரச்சனையால் அதிமுகவினர் 3 அணிகளாக பிரிந்து இந்த ஆண்டு விழாவை கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் அதிமுக கொடியை ஏற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "சாத்தான் வேதம் ஓதக்கூடாது, அதிமுகவின் சட்ட விதிகளை திருத்தம் செய்ய கூடாது என்று பேச பன்னீர்செல்வத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது.
அதிமுகவின் சட்ட விதிகளை திருத்தம் செய்தால் எம்ஜிஆரின் ஆத்மா சும்மா விடாது என்று பன்னீர்செல்வம் கூறுகிறார். ஆனால் அவருடைய சுயலாபத்திற்காக முதலமைச்சர் பதவி ஆசைக்காக 2017ஆம் ஆண்டு அதிமுகவில் பொதுச் செயலாளர் என்கிற பதவியை எடுத்துவிட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை வஞ்சகமாக கொண்டு வந்தார்.
தொண்டர்களால் மட்டுமே பொதுச் செயலாளர் நியமிக்கப்பட வேண்டும் என எம்ஜிஆர் கொண்டு வந்த அதிமுக சட்ட விதிகளை மாற்றியவர் பன்னீர்செல்வம். திமுகவை விரட்ட வேண்டும் என்று அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்கினார். ஆனால் தற்போது ஓபிஎஸ் நேரடியாக சட்டப்பேரவையில் திமுகவின் ஆட்சியை பாராட்டுகிறார். அவருடைய மகன் ரவீந்திரநாத் நேரடியாக ஸ்டாலினிடம் சென்று உங்கள் ஆட்சி சிறப்பாக உள்ளது என்று வாழ்த்துகிறார். இவர்களை எம்ஜிஆரின் ஆத்மா சும்மா விடாது.
அடிப்படை அதிமுக உறுப்பினர் அட்டை வைத்திருக்கும் தொண்டனுக்கு இருக்கும் அதிகாரம் கூட தற்போது ஓபிஎஸ்ஸிடம் இல்லை. எம்ஜிஆரை பற்றியோ ஜெயலலிதா பற்றியோ பேசுவதற்கு எந்த தகுதியும் அருகதையும் ஓபிஎஸ்ஸுக்கு இல்லை" என கூறினார்.
இதையும் படிங்க: அதிமுகவிற்கு துரோகம் இழைப்பவர்கள் அநாதையாக ஆவார்கள் - சி.வி. சண்முகம் எம்.பி. காட்டம்