விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி நிலக்கரி ஏற்றி வந்த லாரி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது அரசூர் கூட்ரோடை கடக்க முயன்றபோது காவல்துறையினர் வைத்திருந்த தடுப்பு கட்டைகளால் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டயர் வெடித்து சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின் போது அரசூர் கூட்டு ரோடை கடக்க இருசக்கரவாகனத்தில் காத்திருந்த தென்மங்கலம் கிராமத்தைச் சார்ந்த நெல் வியாபாரி பழனிவேல் (40) மீது லாரி கவிழ்ந்து பலத்த காயம் அடைந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் பழனிவேலை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கிய லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றதையடுத்து இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.