விழுப்புரத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து இந்த செயற்குழு கூட்டத்தில்,
- காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு.
- திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி.
- திருநெல்வேலி மாவட்டத்தின் ஜீவநதியான தாமிரபரணியை நம்பியாறு, கருமேனியாறு உடன் இணைக்கும் திட்டத்தை விரைந்து முடிக்க கோரிக்கை.
- கொரோனா வைரஸ் எதிராக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்.
- பனையேறும் தொழிலாளர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கிட தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல் உள்ளிட்ட 13 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த என்.ஆர். தனபாலன் கூறியதாவது, "எதிர்க்கட்சிகள் தங்களின் இருப்பை காட்டிக்கொள்ளவே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளன. ரஜினி அரசியல் கட்சியை ஆரம்பிப்பாரா என்பது கடவுளுக்குத்தான் தெரியும். 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும். அத்திக்கடவு - அவினாசி திட்டம் முழுமைபெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழ்நாடு அரசின் அறிவிப்பு பாராட்டுக்குரியது. தமிழ்நாட்டில் பனை மரத்தில் கள் இறக்க அனுமதி தரவேண்டும். மேலும், பனை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கி. வீரமணி போன்றவர்கள் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்துகொண்டு, பெரும்பான்மை மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள்" என்றார்.
இதையும் படிங்க: 'தேர்தல் விதிமுறைகள் முடிந்தவுடன் போராட்டம்' - காவிரி தனபாலன்