வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே இன்றிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (நவ. 25) ஒருநாள் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விழுப்புரத்தில் பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் அவசர தேவைக்காக குறைந்தளவில் ஆட்டோக்கள் மட்டுமே இயங்குகின்றன. இதேபோல் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு, முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசலின்றி காணப்படுகிறது.
சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் முக்கிய இணைப்பாக இருக்கும் விழுப்புரம் பகுதியில் பேருந்துகள், கார் மற்றும் இருசக்கர வாகனம் எதுவுமின்றி ஒரு சில கனரக வாகனங்கள் மட்டுமே இயங்குகின்றன. குறிப்பாக பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள், ஆவின் பால் நிலையங்கள் மற்றும் ஒருசில காய்கறி கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் இன்று (நவ. 25) காலை முதல் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் லேசான காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நிவர் புயல்: சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து!