விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த முன்னூா் கிராமத்தில் பல்லவா் கால லகுலீசா் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் தலைமையிலான குழு கண்டுபிடித்தது.
இதுகுறித்து ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் கூறும்போது, "முன்னூா் கிராமத்தில் சோழா் காலத்தைச் சேர்ந்த சைவ, வைணவக் கோயில்கள் பல உள்ளன. முன்னூர் பழங்காலத்தில் சம்புவராயா்களின் தொடக்க காலத் தலைநகராக விளங்கியதாக வரலாற்று குறிப்புகள் மூலமாக அறியலாம்.
இந்நிலையில் ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள செல்லியம்மன் கோவில் முன் சுமாா் 5 அடி உயரத்தில் பலகைக்கல் சிற்பத்தை செல்லியம்மன், காளி என்று கிராம மக்கள் இன்று வரை பெண் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
வலது கையில் தண்டம் ஏந்தியும், இடது கரத்தினை தொடை மீது வைத்தும், ஒரு காலை மடித்து இன்னொரு காலை தொங்கவிட்ட நிலையிலும் காட்சி தரும் இந்தச் சிற்பம் பல்லவா் கால லகுலீசா் சிற்பமாகும்.
காது, கழுத்துப் பகுதிகளில் அழகு மிக்க அணிகலன்கள் காணப்படுகின்றன. இச்சிற்பத்தில் உள்ள தலை அலங்காரம் பல்லவா்களுக்கே உண்டானது. சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. லகுலீசா் சைவப் பிரிவுகளில் ஒன்றான பாசுபதத்தை தோற்றுவித்தவா் லகுலீசா். இவர் ஈசனின் 28ஆவது அவதாரமாகக் கருதப்பட்டவர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவாமாத்தூா், நன்னாடு, சித்தலிங்கமடம் ஆகிய பகுதிகளில் லகுலீசா் சிற்பங்கள் முன்னரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்தகைய தமிழர்களின் வரலாற்றை பேசும் பழங்கால சிற்பங்களை அரசு முறையாக பாதுகாக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராணுவம் ஆக்கிரமித்த பொது சாலையை மீட்கக் கோரிய வழக்கு - அரசு, ராணுவம் பதிலளிக்க ஆணை!