கரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ ஜெ. அன்பழகன் (62) இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 2ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே அவரது உடல்நிலை மிக மோசமாக இருந்தது. என மருத்துவர்கள் தெரிவித்தனர். தீவிர மூச்சுத் திணறல், கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு 80 விழுக்காடு பிராண வாயு, வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது இறப்பு செய்தியறிந்து திமுக தலைவர் ஸ்டாலின் வேதனைக்குள்ளானார். அவருடைய பிறந்தநாளான இன்று (ஜூன் 10) அவர் உயிரிழந்துள்ளதால் திமுக தொண்டர்களும் சோகமடைந்துள்ளனர். அவரது இறப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது உடல் சென்னை கண்ணம்மா பேட்டையில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
ஜெ.அன்பழகனின் மறைவுச் செய்தியால் பலரும் வேதனையடைந்து வரும் சூழலில், அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் வெங்கமூர் மக்கள் சோகத்தில் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது சொந்த வீட்டில் அன்பழகனின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். திமுக கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் துக்கம் நிறைந்த வார்த்தைகளால் பேசிய ஜெ.அன்பழகனின் சித்தப்பா ஜானகிராமன்.,"அன்பழகனின் மறைவு எங்கள் ஊருக்கு மட்டுமின்றி சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கும் பேரிழப்பு. அவர் இந்தக் கிராமத்தை விட்டு சென்னையில் தங்கியிருந்தாலும், இந்தக் கிராமத்தில் நடைபெறும் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கேற்பார். இந்தப் பகுதியில் உள்ள கோயில் உள்ளிட்ட அனைத்து பொது கட்டுமான பணிகளிலும் அன்பழகனின் பங்களிப்பு இல்லாமல் இருக்காது" என்றார்.
இதையும் படிங்க: கரோனாவால் இந்தியா இழந்த முதல் எம்எல்ஏ