விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தை அடுத்த கோலியனூர் கூட்டுரோடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவ இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களது இனத்தில் மூத்தவரான கிராமினி (எ) எம்ஜிஆர் இன்று (டிச. 16) தனது 100ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இதை கொண்டாடும் விதமாக, அதே சமூகத்தைச் சேர்ந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு ஆலோசகரான செவிலியர் அனுராதா மற்றும் வழக்கறிஞர் ஜெய்சங்கர் அப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு உணவு பொருள்கள், படுக்கைகளை வழங்கினர்.
மேலும், நரிக்குறவ இன மக்களின் மேம்பாட்டிற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக போராடிவரும் ஆசிரியை ஹேமலதா அப்பகுதி சிறுவர் சிறுமியர் மற்றும் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் எடுத்துரைத்தார். இவர், 2020ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.
பின்னர் அனைவரும் பிறந்தநாள் விழா காணும் இனத்தின் மூத்தவரான கிராமினி (எ) எம்ஜிஆரிடம் ஆசி பெற்றனர். ஐந்தாம் தலைமுறை கண்ட தனது இன மூத்தோரின் பிறந்தநாளை கல்வி, மருத்துவம், நலத்திட்ட உதவிகளுடன் நரிக்குறவ இன மக்கள் கொண்டாடியது இச்சமூக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: 'தெரு விளக்கு வெளிச்சத்துல முன்னேறி வருவோம்' - நரிக்குறவர் மாணவியின் சாதனை