விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள கலத்தப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகன்-பிரமிளா தம்பதி. இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் பெங்களூருக்கு கூலி வேலைக்கு சென்றிருந்த முருகன், கரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் உள்ளார். இதையடுத்து சொந்த வீடு இல்லாத காரணத்தினால், கலத்தப்பட்டு பகுதியில் இருக்கும் கரும காரிய கொட்டகையில் தனது ஆறு குழந்தைகளுடன் தங்கியிருந்த பிரமிளா, உணவுக்கு வழியின்றி தவித்து வந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக நிர்வாகிகள் மூலம் பிரமிளாவின் குடும்பத்துக்கு தேவையான அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்தார். மேலும் அமைச்சரின் உத்தரவின் பேரில் அரசு அலுவலர்கள் பிரமிளாவை கொட்டகையிலிருந்து உடனடியாக காலி செய்து, அப்பகுதியில் இருந்த வாடகை வீட்டில் குடி அமர்த்தினர்.
இதனைத் தொடர்ந்து பிரமிளா குடும்பத்தின் நிலையை கருத்தில்கொண்டு, அவரது குடும்பத்துக்கு அரசு சார்பில் இரண்டு சென்ட் இடமும், ரூ இரண்டு லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு ஒன்றை கட்டிக்கொள்ளும் அரசாணையையும் அமைச்சர் வழங்கினார்.
அதுமட்டுமின்றி தன்னுடைய சொந்த செலவில் பிரமிளா மற்றும் அவர்களுடைய குழந்தைகளுக்கு புதிய ஆடைகள், அரிசி, காய்கறிகள் மற்றும் நிவாரணத் தொகையையும் அவர் வழங்கியுள்ளார்.
தங்களுடைய ஏழ்மை நிலைமையை கருணை உள்ளத்தோடு பரிசீலனை செய்து உடனடியாக இரண்டு சென்ட் இடமும், அரசு வீடு கட்டிக் கொள்வதற்கான ஆணையும் வழங்கிய அமைச்சருக்கு பிரமிளா நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் பார்க்க: முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை