விழுப்புரம்: அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்த வழக்கில் பொன்முடி மீதான விசாரணை வரும் இரண்டாம் தேதி ஒத்தி வைத்தது விழுப்புரம் மாவட்டம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தலைமையின் கீழ் தமிழகத்தில் கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு காலகட்டத்தில் உயா்கல்வித் துறை மற்றும் கனிமவளத் துறைக்கு அமைச்சராக பொன்முடி செயல்பட்டு வந்தார்.
அப்போதைய கால கட்டத்தில் விழுப்புரம் மாவட்டம், பூத்துறை கிராமத்தில் செயல்பட்டு வந்த செம்மண் குவாரியில் அரசு நிர்ணயித்த அளவுகளை மீறி அதிகமாக செம்மண் எடுத்தாகவும் இதன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பாக அமைச்சா் க.பொன்முடி, அவரது மகன் பொன்.கௌதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமாா், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் தொடா்புடைய லோகநாதன் என்பவர் ஏற்கெனவே உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தற்போது இவ்வழக்கின் விசாரணையானது கடந்த (ஆக.29) செவ்வாய்க்கிழமை முதல் நீதிமன்றத்தில் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக 67 பேர் சோக்கப்பட்டு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை வரை 6 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு சாட்சியம் அளித்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணைக்காக ஏற்கெனவே வெவ்வேறு தேதிகளில் ஆஜரான ஓய்வு பெற்ற முதல் சாட்சியமான வானூா் வட்டாட்சியர் குமாரபாலன், ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ விஜயகுமாரன் ஆகியோா் பிறழ் சாட்சியம் அளித்தனா். கடந்த (ஆக.29) செவ்வாய்கிழமை கிராம உதவியாளா்கள் பூத்துறை ரமேஷ், கோபாலகண்ணன், சுரங்கத் துறை முன்னாள் துணை இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்தனா். இவா்களில் ரமேஷ், கோபாலகண்ணன் ஆகியோா் பிறழ் சாட்சியம் அளித்தனா். இந்நிலையில், நீதிமன்றத்தில் (ஆக.30) புதன்கிழமை ஆஜரான நில அளவைத் துறையில் முதுநிலை ஆய்வாளராகப் பணியாற்றிய நாராயணனும் பிறழ் சாட்சியமளித்தாா். புதன்கிழமை வரை சாட்சியமளித்த 6 பேரில் 5 பேர் பிறழ் சாட்சியமளித்தனா்.
மேலும் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஆக.31) நடைபெற்ற விசாரணையின் போது அமைச்சா் க.பொன்முடி, பொன்.கெளதமசிகாமணி தவிர மற்ற 5 பேரும் ஆஜராகினா். தொடா்ந்து கனிமவளத் துறையின் முன்னாள் துணை இயக்குநா் கந்தன் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்தாா். இதையடுத்து, இவ்வழக்கில் தொடா்புடைய மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக வருகிற செப்டம்பா் 2ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா உத்தரவிட்டார். அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: Cauvery issue: காவிரி விவகாரத்தில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு!