விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள சந்திரயான்–3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலின் வீட்டிற்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று (ஆகஸ்ட் 24) நேரில் சென்று, வீட்டில் இருந்த வீரமுத்துவேலின் தந்தை பழனிவேலை சந்தித்து சால்வை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர் பொன்முடி, மனைவி விசாலாட்சி பொன்முடி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பழனிவேல் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “ரயில்வே தொழிலாளராக இருந்து, ரயில்வே தொழிலாளர்களுக்கு தன்னுடைய குரலை கொடுத்திருக்கின்ற பழனிவேலின் மகன், இன்று சந்திராயன் 3-ஐ நிலவிலே இறக்கியதன் மூலமாக மிகப்பெரும் பெயரை பெற்றிருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.
இது அவருக்கு கிடைத்திருக்கின்ற பெயர் மட்டுமல்ல. விழுப்புரம் நகரத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்திருக்கின்ற பெருமை. அதனால்தான் தமிழக முதலமைச்சர் அவர்கள், வீரமுத்துவேலை தொலைபேசி வாயிலாக பாராட்டி இருக்கிறார். பழனிவேல் எங்களுடைய குடும்ப நண்பர். வீரமுத்துவேலின் திருமணத்திற்குக் கூட என் துணைவியார், மகன் எல்லோரும் கலந்து கொண்டார்கள்.
மேலும், சமீபத்தில் வீரமுத்துவேலின் தங்கை திருமணம் நடைபெற்றது. அதற்கு கூட அவரால் வர முடியவில்லை. ‘இன்னப்பா தங்கச்சி திருமணத்துக்கு வரியா’என்று அவரிடம் நான் போன் வாயிலாக கேட்டேன். ‘இல்லண்ணே 23ம் தேதி தான் நிலவுல லேண்டர் இறங்குது. 20ம் தேதி திருமணத்திற்கெல்லாம் வர முடியாது!" என்று சொல்லிவிட்டு, கடமையையே கண்ணாக பின்பற்றிய விழுப்புரத்தைச் சேர்ந்த வீர முத்துவேலுக்கு பல்வேறு வாழ்த்துக்களை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.
அவரை வளர்த்து, உருவாக்கிய அவருடைய தந்தையும் விழுப்புரம் நகரத்தின் வளர்ச்சிக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர். முதலமைச்சர் சார்பாக அவருக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வீரமுத்துவேலிடம், ‘நீங்கள் வரும்போது நான் வந்து உங்களை சந்திக்கிறேன்’ என்று சொன்ன ஒரே முதலமைச்சர், தமிழக முதலமைச்சர். அதுதான் முதலமைச்சருக்கு இருக்கின்ற பெரிய தகுதி, அதை அவர் செய்திருக்கிறார்.
பிள்ளைக்கும், தந்தைக்கும் முதலமைச்சர் அவர்கள் வாழ்த்து, பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார். அப்படியாக நம்முடைய விழுப்புரத்திற்கு பெரிய பெயரை உருவாக்கி கொடுத்திருக்கின்றனர் பழனிவேலும், அவரது புதல்வர் வீர முத்துவேலும். எப்போதும் பழனிவேல் பக்திமானாக திகழ்ந்து கொண்டிருப்பவர். அந்த உணர்வோடு இவரை பாராட்டுவதிலே நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். நிச்சயமாக வீர முத்துவேல் தமிழகம் வருகின்றபோது, நானே அவரை விமான நிலையம் சென்று அழைத்துவந்து, முதலமைச்சருடன் எல்லோரும் சேர்ந்து வரவேற்போம்” என்றார்.
அதனைத் தொடர்ந்து, நிலவில் கால் பதித்து உலகிற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித்தந்த விஞ்ஞானி வீர முத்துவேலின் தந்தை, அமைச்சர் மற்றும் அவருடைய மனைவியின் காலில் தன்னுடைய வயதையும் பொருட்படுத்தாது விழுந்துள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் விஞ்ஞானி முத்துவேல் அவர்களின் தந்தையை பெருமிதப்படுத்தும் விதமாக, கலைஞரின் உருவம் பதிக்கப்பட்ட புத்தகத்தை பரிசளித்தது என அனைத்தும் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: அரசுப் பள்ளி கழிவறையில் மின்சாரம் தாக்கி காயமடைந்த மாணவி - சிகிச்சைக்கு உதவி கேட்டு கோரிக்கை!