விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பொம்மையார்பாளையம் கிராமத்தில் தொடர்ந்து கடல் அரிப்பினால் பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. ஒவ்வொரு புயலின்போதும், காற்றின் திசை மாறும்போதும் ஏற்படும் பேரலைகளால் இக்கிராமத்தில் கடலரிப்பு ஏற்பட்டு பல வீடுகளும், சாலைகளும், கட்டடங்களும் கடலினுள் இழுத்துச் செல்லப்படுகின்றன.
இந்தக் கிராமத்தினை கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்க ஆய்வுசெய்த தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனம், இக்கிராமத்தில் கடலின் உள்ளே சுமார் 250 மீட்டர் தொலைவில் நீர் மூழ்கி தடுப்பணைகள் அமைக்க விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது.
அதனடிப்படையில் இன்று பொம்மையார் பாளையம் கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.19 கோடி மதிப்பில் நீர்மூழ்கி தடுப்பணைகள் கட்டுவதற்கான பணியை மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தொடங்கிவைத்தார்.
இத்திட்டத்தில் சுமார் ஆயிரத்து 350 மீட்டர் நீளத்துக்கு 2 அடுக்கு நீர்மூழ்கி தடுப்பணைகள் சுமார் 3.50 மீட்டர் உயரத்துக்கு அமைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் பொம்மையார்பாளையர் கிராமம் முழுவதும் கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்கப்படும். போதிய அளவு கடற்கரை உருவாகும். இதனால் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்த முடியும்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சக்கரபாணி, துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.