விழுப்புரம்: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மேல்சிகிச்சைக்காக சென்னை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சராக இருந்து வருபவர் துரைக்கண்ணு. இவர் இன்று காலை சென்னையிலிருந்து சேலத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் உடனடியாக விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்துவருகின்றனர்.
இதனிடையே சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து அமைச்சரை சந்தித்து நலம் விசாரித்தனர்.
அமைச்சரின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு மருத்துவமனையில் கரோனா தொற்று பரிசோதனை செய்ததில் தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சர் தாயார் மறைவு: ஸ்டாலின் இரங்கல்