விழுப்புரம்: மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் பூஜை செய்வதற்காக மட்டும் கோயிலை திறக்கக்கோரிய வழக்கில் விசாரணை முடித்து வைக்கப்பட்ட நிலையில் ஜூலை 7ல் இந்த வழக்கு குறித்த இரண்டாம் கட்ட விசாரணைக்கு ஆஜராக இரு பிரிவினருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் பிரசித்திபெற்ற திரவுபதி அம்மன் கோயில் உள்ளது.
இக்கோவிலில் குறிப்பிட்ட பிரிவினரை தெய்வ வழிபாட்டிற்கு அனுமதிக்கவில்லை என பிரச்னை எழுந்தது. இதையடுத்து அதனை சட்டம் ஒழுங்கு பிரச்னையாக காரணம் காட்டி, கடந்த ஜூலை 7ம் தேதி கோயிலுக்குச் சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்தும், கோயிலை மீண்டும் திறக்க அரசுக்கு உத்தரவிடக்கோரியும் விழுப்புரம் மாவட்டம், கரியபாளையத்தைச்சேர்ந்த சுதா சர்வேஷ் குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
மேற்கண்ட அம்மனுவில், கோயிலில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் நுழைய அனுமதி மறுக்கப்படவில்லை எனவும்; தீண்டாமை பின்பற்றப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கரோனா ஊரடங்கு காலத்தில் கூட பொதுமக்கள் இல்லாமல் கோயில் பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது கோயிலில் தினசரி பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்பட வேண்டும் என்ற ஆகம விதிகளை மீறும் வகையில் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டதைத் தவிர்த்து பொதுமக்களை அனுமதிக்காமல், பூஜைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி இருக்க வேண்டும் எனவும் சட்டம், ஒழுங்கை காரணம் காட்டி கோயிலுக்கு சீல் வைக்க அரசுக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவானது தலைமை நீதிபதி அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “கோயில் திருவிழாவில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்கு வழிபாடு நடத்த அனுமதி அளிக்கவில்லை. இதில் ஏற்பட்ட தகராறு காரணமாக தான் பிரச்னை ஏற்பட்டு சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்தது.
அதன் அடிப்படையில் கோயிலுக்குச் சீல் வைக்கப்பட்டது. கோயிலை நிர்வகிப்பதற்கு அறநிலையத்துறை சார்பாக அரசு ஒருவரை நியமித்துள்ளது. ஆனால் அவர் இன்னும் பொறுப்பேற்க முடியாமல் உள்ளது. எனவே இதுகுறித்து முழுமையான விசாரணை நடந்துகொண்டிருப்பதால் தற்போது கோயிலை திறக்க அனுமதிக்கக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், விசாரணை நடந்து வருவதால், கோயில் விவகாரத்தில் அறநிலையத்துறை தான் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், எனவே கோயிலைத் திறக்கும் விவகாரத்தில் மனுதாரர் அறநிலையத்துறையை அணுகலாம் என தெரிவித்தனர்.
மேலும் சட்டம், ஒழுங்கு பிரச்சனை நிலவுவதால் கோயிலை திறக்க உத்தரவிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், மனுதாரர் விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். இதன் மூலம் பூஜை செய்வதற்காக மட்டும் கோயிலை திறக்ககோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைத்த விவகாரம் தொடர்பாக ஜூலை 7ல் இரண்டாம் கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் ஜூலை 7ம் தேதி இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு ஆஜராக இரு பிரிவினருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:CM Stalin discharged: வீடு திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்!