விழுப்புரம்: மரக்காணம் அருகே கேசவநாயக்கன்பாளையம் கிராமத்தைச்சேர்ந்த முதியவர், சேகர்(63). இவரது மகளுக்குத் திருமணம் செய்து வைத்தநிலையில், இவர் தனது மனைவி கெங்கம்மாளுடன் வசித்து வருகிறார்.
ஆதரவற்ற வறுமை நிலையில் வாழ்ந்து வரும் இவர் கடந்த 2021-ல் மரக்காணம் தாலுகா அலுவலகத்தில் 'முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு' திட்டத்தில் 'ஓய்வூதியத் தொகை' கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
ஆனால், ஓய்வூதியத்தொகைக்கான ஆணை வழங்க மரக்காணம் சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலக ஊழியர்கள் ரூ.5 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் தராததால் முதியவர் சேகரை கடந்த 2 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சேகர், நேரில் சென்று தனது மனு குறித்து கேட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்தவர்கள் மனு அளித்த சேகர் உயிரிழந்து 4 மாதங்கள் ஆகிவிட்டதால் அவரின் மனு நிராகரிக்கப்பட்டதாக சேகரிடமே தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சேகர், தான் உயிரோடு இருக்கும்போதே, தான் உயிரிழந்துவிட்டதாக கூறியதைக் கேட்டு முதியவர் சேகர் செய்வதறியாமல் திகைத்துள்ளார். அரசு அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கு, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்களை அலைக்கழிப்பிலும் மன உளைச்சலிலும் ஆழ்த்தும் அலுவலர்களின் போக்கு குறைந்தபாடில்லை என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்ததோடு, அதிகாரிகளின் பணியையும் தெள்ளத்தெளிவாக வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.
என்ன தான் லஞ்ச ஒழிப்புத் துறையினர், லஞ்சத்தை ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும் இத்தகைய சம்பவங்கள் அனைத்து தரப்பினரிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியவாறே உள்ளன. அதேநேரத்தில் அரசு அலுவலகங்களில் இருந்து நீக்க முடியாத கறையாக உள்ள இந்த லஞ்சம் எப்போதுதான் களையப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: மாமூல் கேட்ட காவலர்: வீடியோ எடுத்து ஓடவிட்ட வாகனஓட்டி