விழுப்புரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுவதை கண்காணிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விழுப்புரம் அருகேவுள்ள இந்திரா நகர் குடியிருப்பில் சிலர் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் அந்தப் பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது ராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சோதனையிட்டதில், ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள 202 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்தப் பகுதியில் நேரில் சென்று ஆய்வு நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், குற்றவாளியை காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.