விழுப்புரம்: மேல்மலையனூர் தாலுகா செக்கடிகுப்பம் ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான தரிசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்த வீடுகள், பயிர் மற்றும் உலர் களம் போன்றவற்றை வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோர் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றச் சென்றனர்.
இவர்களுடன் தீயணைப்புத்துறை, ஆரம்ப சுகாதாரத்துறை அலுவலர்கள், அவலூர்பேட்டை மற்றும் நல்லான்பிள்ளைபெற்றால் காவல் நிலையத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட போலீசார் உடன் இருந்தனர். இந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த கெங்கம்மாள் என்ற மூதாட்டி, வீட்டு முன் படுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் காவலர் ஒருவர், மூதாட்டியின் கையைப் பிடித்து எழுப்பி உள்ளார். ஆத்திரம் அடைந்த மூதாட்டி, பெண் காவலரை முகத்தில் அறைந்துள்ளார். உடனடியாக பெண் காவலரும் மூதாட்டியைத் திருப்பி அறைந்துள்ளார்.
இது அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்வதற்குள், அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்குச் சிறிது நேரத்திற்குப் பரபரப்பு நிலவியது. அதேநேரம் அங்கு இருந்த அம்மன் கோயிலின் சுற்றுச்சுவரை அகற்றுவதற்கு முன்னதாக வட்டாட்சியர் அலெக்ஸ்சாண்டர், கோயிலுக்குக் கற்பூரம் ஏற்றி எலுமிச்சம்பழம் சுற்றி அம்மனை தரிசித்தார்.
இதையும் படிங்க: நெல்லையில் அரிய வகை ஒளிரும் கல்.. விற்க முயன்ற 2 நபர் கைது!