தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுவது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை. 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து சென்று, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அழகைக் காணவும், அங்குள்ள குளுமையை அனுபவிக்கவும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
தற்போது கோடைகாலம் ஆரம்பமாகி வெயில் வாட்டிவதைப்பதால், குழந்தைகளுடன் சுற்றுலா வாகனங்களில் இங்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று (மார்ச் 28) கொல்லிமலை அடிவாரத்தில் காரவள்ளி வனத் துறை சோதனைச்சாவடிக்கு அருகில், பெரியாறு நீர்வழிப்பாதையை ஒட்டிய மூங்கில் மரங்கள் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
காட்டுத்தீ, கீழ்செங்கோடு, முட்டுக்காடு, நடுகோம்பைப் பகுதியில் இருந்த 200 ஏக்கர் பரப்பளவிலான மூங்கில், பாக்கு, மாமரங்கள் கொழுந்துவிடடு எரிந்தது. இதனை அவ்வழியாகச் சென்ற சுற்றுலாப் பயணிகளும், அப்பகுதி மக்களும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து வனத் துறையினர் தீயை அணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, நாமக்கல், ராசிபுரம் பகுதியிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் காரவள்ளி அடிவாரப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டன.
மேலும், வனத் துறையினர் 500-க்கும் மேற்பட்டோர் மண்ணை கொட்டி தீ மேலும் பரவாமல் தடுக்கும் பணியை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அலுவலர் காஞ்சனா, நாமக்கல் சார்-ஆட்சியர் சு.கிராந்திகுமார்பதி ஆகியோர் விரைந்துவந்தனர்.